“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மக்களுக்கு எதிராக "இனப்படுகொலை" நடக்கவில்லை என ரமபோசா மறுப்பு தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே 21 அன்று சந்தித்தார். இந்த சந்திப்பு, அமெரிக்காவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே உறவை வலுப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இது வழக்கமான சந்திப்பாக இல்லாமல், டிரம்பின் ஒரு குற்றச்சாட்டால் பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
ஏனென்றால், சந்திப்பின்போது, டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக “இனப்படுகொலை” நடப்பதாகக் கூறினார். “இனப்படுகொலை” என்றால், ஒரு இனத்தை முறையாக அழிக்கும் வன்முறை. அவர் இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க ஒரு வீடியோவையும், செய்தித்தாள் கட்டுரைகளையும் காட்டினார். இது தென்னாப்பிரிக்க அரசாங்கத்தை நேரடியாக விமர்சிக்கும் வகையில் இருந்தது.
டிரம்ப், தனது குற்றச்சாட்டை இன்னும் வலுவாக காட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு வெள்ளை மாளிகையில் ஒரு வீடியோவை திரையிட உத்தரவிட்டார். அவர் திரையிட்ட அந்த வீடியோவில் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின விவசாயிகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றியது. இந்த வீடியோவை போட்டுக்காட்டுவதற்காக ட்ரம்ப் அறையின் விளக்குகளை அணைக்கச் செய்து, பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த வீடியோவைக் காட்டினார்.
வீடியோவை போட்டு காட்டி ட்ரம்ப் குற்றச்சாட்டு வைத்த நிலையில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா சற்று நேரம் அதிர்ச்சியாகி டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்தார். தென்னாப்பிரிக்காவில் வன்முறைகள் உள்ளன, ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் குறிவைத்தவை இல்லை என்று அவர் விளக்கினார். எல்லா இன மக்களும் குற்றங்களால் பாதிக்கப்படுவதாகவும், இதை “இனப்படுகொலை” என்று சொல்வது தவறு என்றும் அவர் கூறினார். சந்திப்பின் போது டிரம்பின் இந்த செயல், அமெரிக்காவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கியது.