நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!
நில மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு தெலுங்கானா தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரதாரராக செயல்பட்டதற்காக தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் செய்த மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புகாரில் மகேஷ் பாபுவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் துணைத் தகவல்களின் அடிப்படையில், ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நடிகர் மகேஷ் பாபு, சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின்படி, பாலாபூர் கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்குவதற்கு தலா ரூ.34.80 லட்சம் செலுத்தினர்.
பின்னர், உண்மையான வரைபடம் இல்லை என்பதை அறிந்து, தங்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு அழுத்தம் கொடுத்தபோது, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ் சந்திரகுப்தா மட்டுமே பல தவணைகளில் தலா ரூ.15 லட்சம் மட்டுமே செலுத்தியதாக கூறிருக்கிறார்.
இந்த நிலையில், நோட்டீஸ் பெற்றவர்கள் நாளை (ஜூலை 8 ஆம் தேதி) நேரில் அல்லது வழக்கறிஞர்கள் மூலம் நுகர்வோர் மன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், மகேஷ் பாபு மூன்றாவது நபராக சேர்க்கப்பட்டுள்ளார், இதற்கு மகேஷ் பாபு எவ்வாறு பதிலளிப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையில், நடிகர் மகேஷ் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ஒரு பெரிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும். இயக்குநர் ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தின் மீது ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.