அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?
மடப்புரம் காவலாளி வழக்கில் தொடர்புடைய நிகிதா (நகை திருடு போனதாக கூறியவர்) மீது, 2 பண மோசடி வழக்குகள் மதுரை திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது, ஏற்கெனவே பணமோசடி வழக்கு இருப்பது அம்பலமாகியுள்ளது. அதன்படி, அவர் மீது ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமங்கலத்தை சேர்ந்த ராஜாங்கம் உள்ளிட்ட மூவரிடம் நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2016ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2010 இல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று கூறி நிகிதா மோசடி செய்துள்ளார். பணத்தை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்ட போது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இந்த செய்தி வெளியான கொஞ்ச நேரத்திலேயே, மதுரை திருமங்கலத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு நிகிதா தலைமறைவாகியுள்ளார். அவர் எங்கே சென்றார் என்றே தெரியவில்லையாம். பண மோசடி வழக்கில் சிக்கிய ஒருவருக்காக, தனிப்படை போலீஸ் வந்தது எப்படி என்று தற்போது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.