கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!
கேட் கீப்பர் செய்தது மிகவும் தவறு தான் அவர் அப்படி திறந்திருக்கக்கூடாது எனவும் ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே, ஆச்சாரியா பள்ளியின் வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் அதிவேகமாக வந்து மோதியது. இதில் வேன் முற்றிலும் நொறுங்கியதாகவும், மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்ட உடைமைகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்ததும் விபத்து தொடர்பான வீடியோக்களை வைத்து பார்க்கையில் தெரிந்தது.“கேட் கீப்பரின் அலட்சியத்தால் இந்த கோர விபத்து நேர்ந்தது,” என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். “ரயில்வே கேட்டை மூடாமல், கேட் கீப்பர் தூங்கிவிட்டார். இதனால் வேன் கடந்து சென்றபோது விபத்து ஏற்பட்டது,” என்று நேரில் பார்த்தவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
ரயில்வே தரப்பில், “பள்ளி வேன் ஓட்டுநர்தான் ரயில்வே கேட்டை மூட வேண்டாம் என கேட் கீப்பரிடம் கூறி, கடந்து செல்ல முயன்றார்,” என விளக்கமும் அதற்கு பிறகு அளிக்கப்பட்டது. ஆனால், விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம் என்னவென்றால், நான் கீப்பரிடம் பேசவே இல்லை கேட் திறந்து தான் இருந்தது எனவும் வாக்குமூலம் கொடுத்த காரணத்தால் குழப்பமும் கேள்விகளும் அதிகரித்துள்ளது. விரிவான விசாரணை முடிந்த பிறகு தான் விபத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான சோகமான சூழ்நிலையில், மக்கள் அழுத்தம் கொடுத்த காரணத்தால் தான் கேட் திறக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே திருச்சி மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் ” விபத்து நடந்தது எனக்கு வேதனையாக இருக்கிறது. முதல் முறையாக எனக்கு தெரிந்து தமிழகத்தில் இப்படி ஒரு விபத்து நடந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆழ்ந்த அனுதாபங்களை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்/
காலை 7.10 மணிக்கு ரயில் வருவதை தெரிந்து 7.6க்கு கேட்டை கீப்பர் திறந்துவிட்டிருக்கிறார். முதலில் திறக்காமல் இருந்திருக்கிறார் ஆனால், ரயில் வருவதற்குள் நாங்கள் கடந்துவிடுகிறோம் என்று மக்கள் கொடுத்த அழுத்தத்தால் தான் அவர் கேட்டை திறந்திருக்கிறார்” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் மக்கள் சொன்னா திறந்துவிட்டுவிடுவாரா? என கேள்வி எழுப்ப அதற்கு பதில் சொன்ன அன்பழகன் “இல்லை அவர் சொன்னதை நான் சொன்னேன். மக்கள் அப்படி சொல்லிருந்தாலும் திறந்திருக்க கூடாது கீப்பர் செய்ததும் தவறு தான் மக்கள் கேட்டை திறக்க சொன்னதும் தவறு தான்” என கூறினார். பிறகு விபத்தில் சிக்கிய வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது ” அதற்கு பதில் அளித்த அவர் இனிமேல் தான் நடந்தது என்ன என்பது பற்றி விசாரணை நடந்த பிறகு தெரியும்” எனவும் கூறினார்.