ராகுல் காந்திபோல தவறை ஸ்டாலின் உணர்வாரா? – அன்புமணி கேள்வி.!
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி உணர்ந்த தவறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்வாரா? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம் வைத்து, ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் வரலாற்றுத் தவறை உணர்ந்ததைப் போல, ஸ்டாலின் தனது பதவிக்காலத்தில் உணர்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாப்பதற்கான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தத் தவறியதன் மூலம் தாம் பெரும் தவறை செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி கூறியிருக்கிறார். தாமதம் ஆனாலும் தமது தவறை அவர் உணர்ந்திருப்பது மிகச்சரியான நிலைப்பாடு.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வண்டும் என்று அன்றைய அரசின் அங்கமாக இருந்த பாமக வலியுறுத்தியது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் மனுவில் 140க்கும் மேற்பட்ட ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளைப் பெற்று 24.10.2008-ஆம் நாள் அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அவர்களை சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து வலியுறுத்தினேன். அதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் பா.ம.க. உள்ளிட்ட சமூகநீதிக் கட்சிகள் இக்கோரிக்கையை வலியுறுத்தின.
ஆனால், இந்தக் கருத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகை விவரங்களை வெளிக்கொண்டுவரக்கூடியது.
அந்த விவரங்கள் வெளிவந்தால் மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாது என்பது தான் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எண்ணமாக இருக்கிறது. இந்த நிலைப்பாடு தவறு என்பதை முதலமைச்சர் எப்போது புரிந்துகொள்வார் என்பது தான் தெரியவில்லை” என்று விரிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.