டெல்லி : CJP சார்பில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே முக்கியக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கடந்த ஒரு மாதமாக எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தின் நற்பெயரைக் களங்கப்படுத்தவும், அதனைச் சீர்குலைக்கவும் பாஜக தரப்பிலிருந்து வெளி நபர்களும் குண்டர்களும் திட்டமிட்டு அனுப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

CJP நிறுவனர் அபிஜித் தீப்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்களது போராட்டத்தின் நற்பெயரைக் களங்கப்படுத்தவும், அதனைச் சீர்குலைக்கவும் பாஜக தரப்பிலிருந்து வெளி நபர்களும் குண்டர்களும் திட்டமிட்டு அனுப்பப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஒரு மாதமாக எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டம் வலுப்பெற்றுள்ளதால் பாஜகவினர் வேண்டுமென்றே கற்களை வீசி வன்முறையைத் தூண்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், காவல்துறை வாகனங்களில் கற்கள் கொண்டுவரப்படுவதாகவும், அந்த நபர்களே கற்களை வீசிவிட்டு CJP தொண்டர்கள் மீது பழி சுமத்துவதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் CJP ஆதரவாளர்கள் பங்கேற்கவுள்ள 'சலோ சன்சாத்' (நாடாளுமன்ற நோக்கிய பேரணி) போராட்டத்திற்குத் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதால், அப்பகுதியில் பாதுகாப்புகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை பாஜக தரப்பிலிருந்து இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கப்படவில்லை.

இதற்கிடையே, கடந்த 25 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுங் தனது உடல்நலத்தைக் கருத்திற்கொண்டு உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று அபிஜித் தீப்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேசமயம், ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகும் வரை தங்களுடைய அமைதியான முறையிலான போராட்டம் எந்தக் காரணத்தைக் கொண்டும் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.