சென்னை : இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இக்கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்காக மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய் " கடந்த நான்கு மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மாற்று எரிபொருள்களைப் பயன்படுத்துவதாலும் சிலிண்டர் விலை உயர்வாலும் பொதுமக்கள் தங்களது அன்றாட வருவாயிலிருந்து கூடுதலான தொகையைச் செலவழித்து மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பொதுமக்களின் இந்த நிதிச்சுமையைக் குறைக்கவும், தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கத்துடனும், நிதி நெருக்கடியான சூழலிலும் குடும்பத் தலைவிகளின் நலனைப் பாதுகாக்க அரசு முடிவு செய்துள்ளது. 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' (Annapoorni Super 6) திட்டத்தின் முதற்கட்டமாக, தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.

பயனாளிகள் எரிவாயு சிலிண்டரைப் பதிவு செய்து பெற்றுக்கொண்ட பிறகு, அதற்கான தொகை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு, நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் (Direct Benefit Transfer) வரவு வைக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு குறு விவசாயக் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பங்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினர் இத்திட்டத்தின் மூலம் முழுமையாகப் பயனடைவார்கள். இதன் மூலம் சுமார் 1,30,16,104 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 2027 பொங்கல் பண்டிகையை (ஜனவரி மாதம்) முன்னிட்டு இது முழுமையான செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் தோராயமாக ரூ. 4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தனது உரையில் அறிவித்துள்ளார்.