சென்னை : தமிழ்நாட்டில் தவெக அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பட்ஜெட்டில், பெண்களின் நலன், தாய்மை மற்றும் குழந்தை பிறப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு புதிய மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்களை பற்றி பார்ப்போம்.

பெண்களின் திருமண வாழ்வை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்குத் பொருளாதார ரீதியில் கைகொடுக்கும் நோக்கிலும் 'அண்ணன் சீர்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், திருமணத்தின் போது அரசு சார்பில் பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும் சீர்வரிசையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இப்போதைய பட்ஜெட்டில் ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்தத் திட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்துமா அல்லது இதற்கென ஏதேனும் குறிப்பிட்ட தகுதிகள் அல்லது வருமான வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் தகவல்கள் தற்போதைய அறிவிப்பில் வெளியிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, தாய்மார்களின் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் கர்ப்பிணிப் பெண்களுக்காக மாநிலம் முழுவதும் பிரத்யேகச் சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் இப்பெண்கள் இந்த மையங்களில் தங்கிப் பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இங்கு தங்கும் பெண்களுக்குக் கட்டணமில்லாமல் தரமான உணவு, அவசியமான மருத்துவ உதவிகள் மற்றும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட அத்தனை சேவைகளும் முழுமையாக வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளை வரவேற்கும் விதமாகவும், தாய்மையின் பெருமையைப் போற்றும் வகையிலும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இந்த நெகிழ்ச்சியான மற்றும் புதுமையான திட்டத்திற்காகப் பெருமளவில் ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.