புதுச்சேரி : நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன் தமிழ்நாட்டில் என்ன மாற்றம் நடந்துள்ளது எனவும் தர்மேந்திர பிரதான் பாவம, மோடி விலக வேண்டும் எனவும் பல விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் " நீட்டால் ஏற்படும் பாதிப்புகள் மாற வேண்டுமென்றால் அதை ரத்துசெய்ய வேண்டும். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாவம், இதை நான் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை."

"தனிநபரை மட்டும் பதவி விலகச் சொல்வது நல்ல விளைவை தராது. இதற்கு முழு அரசு பொறுப்பேற்க வேண்டும்; கல்வி அமைச்சரை அல்ல, பிரதமர் மோடிதான் பதவி விலக வேண்டும் என்று சொல்லுங்கள், அதுதான் சரி. இந்த சிஸ்டத்தில் அத்தனை ஓட்டை, உடைசல்கள் உள்ளன. கடைசி ஆளாக இருக்கும் பியூன் வரை மாற்றாமல் எதையும் மாற்ற முடியாது, ஒரு ஆளை மாற்றுவதால் பிரச்னைகள் தீராது" என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் "காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் கொண்டுவந்தது என்பதால், 'இதை நாங்கள் தூக்கி எறிகிறோம்' என பாஜக ஏன் நீட்டைத் தூக்கி எறியக்கூடாது?"

"காங்கிரஸ் கொண்டு வந்த எத்தனையோ திட்டங்களின் பெயரை மாற்றிய அரசுதானே பாஜக? ஆனால், நீட்டை அறிமுகப்படுத்தியதால் காங்கிரஸும் அதை வேண்டாம் என்று சொல்லாது; அதில் சுகம் காண்பதால் பாஜகவும் நீட்டை வேண்டாம் என்று சொல்லாது" என்று அவர் விமர்சித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து "விசிக உடைய வேண்டும், சிதைய வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் சில அரசியல் சக்திகள் செயல்படுகின்றன. விசிக நினைத்திருந்தால், தேர்தலுக்கு முன்பே தி.மு.க கூட்டணி சிதறியிருக்கும். இந்த முறை தி.மு.க பல தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு விசிக வாக்குகளே முக்கிய காரணம்; அதற்கான தரவுகள் எங்களிடம் உள்ளன" என்றும் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.