சென்னை : தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று இன்னும் 15 நாட்களே ஆன நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற குற்றச்சம்பவங்கள் அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெளியாகும் கொலை, பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
செய்தி ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி, தவெக அரசு பொறுப்பேற்ற 15 நாட்களுக்குள் மாநிலம் முழுவதும் 25 கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அதில் 4 இரட்டைக் கொலை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், 19 பாலியல் குற்றச்சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, “ஆட்சி மாறினால் காட்சி மாறும்” என்று தேர்தல் பிரசாரத்தின் போது தவெக கூறியதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. குறிப்பாக, த.வெ.கவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் “சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்ற விளக்கத்தை கேள்விக்குள்ளாக்கி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரிய விவாதம் எழுந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
மேலும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், காவல்துறை கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும், இரவு நேர பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எப்படி கையாளப் போகிறார் முதலமைச்சர் விஜய்? குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு என்ன புதிய நடவடிக்கைகளை அறிவிக்கப் போகிறது? என்பதே தற்போது தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.