சென்னை : சைதாப்பேட்டையில் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையிலும், திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலும் ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டு தவெக அரசுக்கு எதிராக மிகக் கடுமையான கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைவர்களின் மிசா சிறைவாசத்தைக் கொச்சைப்படுத்தியது மற்றும் சட்டமன்றத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் காட்டிய முதல்வர் விஜய்யின் போக்கைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்யை மிகக் காட்டமாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
திருச்சி ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "சட்டமன்ற அவையைப் பார்த்தால் ஒரு பக்கம் உள்ளவர்கள் எல்லாம் மக்கள் பிரச்சனைகளைப் பேச அசெம்பிளிக்குச் செல்கிறோம் என்கிற மனநிலையோடு வருகிறார்கள்; ஆனால் ஆளுங்கட்சித் தரப்போ ஏதோ சினிமா ஷூட்டிங் நடக்கும் 'ஏவிஎம் ஸ்டுடியோ'விற்குச் செல்கிறோம் என்கிற மனநிலையோடு வருகிறார்கள்" என்று கிண்டலடித்தார். சினிமா பாணியில் வசனம் பேசுபவர்களுக்கு முன்னால் நேராக நின்று என்ன பேசினாலும் அவர்களுக்கு என்ன புரியப்போகிறது என்று கேள்வி எழுப்பினார்.
முதல்வர் விஜய்யின் உடல்மொழியை விமர்சித்த அன்பில் மகேஷ், "முதல்வர் விஜய் பார்க்கிற பார்வை அப்படியே சர்வாதிகாரி ஹிட்லரை ஞாபகப்படுத்துவது போல இருக்கிறது" என்றார். அவருக்கு முட்டுக்கொடுக்கும் அமைச்சர்கள் அனைவரும் ஹிட்லரின் பிரச்சாரச் செயலாளரான ஜோசப் கோயபல்ஸின் கோட்பாட்டைப் பின்பற்றுகிறார்கள் என்று சாடினார்.
தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டே இருந்தால் ஒரு நாள் அந்தப் பொய் மக்களிடம் எடுபட்டுவிடும் என்கிற ஒரே நோக்கத்தோடு, வெறும் வார்த்தைகளால் மட்டுமின்றி எமோஷனலாகவும் சட்டமன்றத்தில் தவெக அமைச்சர்கள் அடுக்கடுக்காகப் பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள் என்றார். உண்மை செருப்பு போடுவதற்குள் பொய் ஊரையே சுற்றி வந்துவிடுகிறது என்றும், அதற்கெல்லாம் சேர்த்து இன்று விளக்கம் சொல்ல வேண்டிய ஒரு தலையெழுத்து திமுகவிற்கு வந்திருக்கிறது என்றும் வேதனை தெரிவித்தார்.
அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமாரை 'காக்கி டவுசர்' என்று சாடிய அன்பில் மகேஷ், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்ட 15 கேள்விகளுக்கு ஒரு பதில் கூடச் சொல்லாமல், மிசா வரலாற்றை அவதூறாகப் பேசி திசை திருப்புகிறார்கள் என்றார். "மிசாவில் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று இவர்கள் வைக்கும் அஜெண்டா தவெக-வின் சொந்த அஜெண்டா அல்ல; அது முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் (RSS) இயக்கம் வைக்கும் அஜெண்டா" என்று அதிரடியாகக் குற்றம் சாட்டினார். இந்த அவதூறை முதலில் அதிமுகவின் மாஃபா பாண்டியராஜன் பேசினார், பிறகு பாஜகவின் எச்.ராஜா பேசினார், இப்போது அமைச்சர் நிர்மல்குமார் பேசுகிறார் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த மூன்று பேருமே அடிப்படையில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்கள் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் மறந்துவிடக் கூடாது என்றார்.