சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் திருமாவளவன் இன்று தனது 64-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். சமூகநீதி, சமத்துவம் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அவருக்கு, தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணித் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய்: "தொல்.திருமாவளவனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்" என்று வாழ்த்தியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட விழைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: "தனது 28-ஆம் வயதில் கட்சி ஆரம்பித்து, 36 ஆண்டுகள் கட்சியை கட்டிக்காப்பாற்றி, தன்னுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும் விட்டுக்கொடுக்காமல், ஒரு தொண்டனையும் இழக்காமல், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென்று ஓயாமல் போராடி, அதையும் சாதித்தவர் என்னுடைய அருமை நண்பர் திரு. தொல். திருமாவளவன் M.P. அவர்கள். 65-ஆவது வயதில் நுழையும் இந்த தருணத்தில் அவர் பெரும் பேறும் புகழும் பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று தனது நெகிழ்ச்சியான வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

இதற்கிடையே, விசிக சார்பில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான மாநாட்டையொட்டி, உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்துகொள்ளும் மாணவர்களின் நலன் மற்றும் மாநாட்டுப் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளிலும் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாநாட்டு நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் நேரில் சென்று தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.