தூத்துக்குடி : சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்றதாகக் கைது செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அருணாச்சலத்தின் மரணம் தொடர்பாகத் தூத்துக்குடி தெற்கு காவல் துறை தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு : கடந்த 17.07.2026 அன்று தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் (24) என்பவர், மதுவிலக்கு அமலாக்க சோதனையின் போது 180 மில்லி லிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காகத் தெற்கு காவல் நிலையக் குற்ற எண். 751/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனை: அதனைத் தொடர்ந்து, 17.07.2026 அன்று மாலை சுமார் 5.50 மணியளவில், அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டது. பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தகுதியுடையவர் என சான்றளித்ததுடன், அவரது உடலில் எந்தவித வெளிப்புறக் காயங்களும் இல்லை என்றும் மருத்துவ சான்றிதழில் சான்றளித்தார்.
காவல் நிலையத்தில் நடந்தது என்ன?: மருத்துவப் பரிசோதனைக்குப் பின் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு லாக்-அப்பில் வைக்கப்பட்ட அவர், பிற கைதிகளுடன் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரெனத் தானாகவே மயங்கி கீழே விழுந்தார். இந்தச் சம்பவம் லாக்-அப் முன்புறமிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.
ஜாமீன்: உடனே அவருக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு, காவல் நிலைய வரவேற்புப் பகுதியில் இருந்த அவரது தாயாரும் உடனடியாக அழைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை இயல்பாக இருந்த காரணத்தினால், கூடுதல் முன்னெச்சரிக்கையாக அவரை ஜாமீனில் விடுவித்து உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி & இறப்பு: அதன்பின்னர் மருத்துவமனை அருகே அவர் மீண்டும் மயங்கி விழுந்ததால் உறவினர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று (23.07.2026) அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து உயிரிழந்த அருணாச்சலத்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முறைப்படி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.