சென்னை : தமிழகத்தில் உள்ள முக்கியத் திருக்கோயில்களில் பாதுகாப்பு மையங்களில் மொபைல் போன்களை வைப்பதற்காக 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்துப் பல்வேறு தரப்பில் இருந்து விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், இது புதிய நடைமுறை அல்ல என்றும், இதில் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கத்தை அளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் "கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, திருச்செந்தூர் கோயிலில் மொபைல் போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களிலும் மொபைல் போன் பயன்பாட்டுத் தடையை முறைப்படி அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் விதமாகவே, கடந்த சில ஆண்டுகளாகவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர், பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கியத் தலங்களில் மொபைல் போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஏற்கனவே வழக்கத்தில் இருந்து வருகிறது. எனவே, தற்போது புதிதாக எந்த ஒரு நடைமுறையையும் அரசு கொண்டு வரவில்லை என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏற்கனவே இந்த வசதி இல்லாத இதர 52 முதுநிலை கோயில்களிலும் தற்போது பக்தர்கள் வசதிக்காகப் பாதுகாப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரையும் கட்டுப்படுத்தவோ அல்லது பக்தர்களைத் தேவையற்ற முறையில் கஷ்டப்படுத்தவோ இந்த அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும், பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கர்ப்பிணிப் பெண்கள், கைக் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இந்த விதிகளில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய மொபைல் போன்களைப் பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், சாதாரண கேமரா இல்லாத மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களையும் தேவையற்ற முறையில் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கோயில்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த ஐந்து ரூபாய் கட்டண வசூலின் மூலம் கோயில்களுக்கு ஏதோ தனியாக வருமானம் ஈட்டுவது போலவும், தனிநபர்கள் லாபம் அடைவது போலவும் சிலர் திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர். உண்மையில், இந்தப் பாதுகாப்பு மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண் ஊழியர்களின் சம்பளம் மற்றும் டோக்கன் பிரிண்ட் செய்வதற்கான பேப்பர் ரோல் செலவுகளுக்காக மட்டுமே அந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது. அப்படியும் இதில் ஏதேனும் கூடுதல் நிதி மிச்சமடைந்தால், அது கோயிலுக்கு வரும் ஏழை எளிய பக்தர்களின் அன்னதானத் திட்டத்திற்காக மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும்.

அரசின் இந்த நல்ல நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், இந்து சமய அறநிலையத்துறை இருக்கக் கூடாது என்று நினைக்கும் சில கூட்டங்கள், அரசியல் உள்நோக்கத்தோடு கண்மூடித்தனமான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. மக்களுக்கான இந்த அரசு பக்தர்களுக்கு எவ்வித மன உளைச்சலையும் தராது என்றும், களத்தில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பது தெரியவந்தால் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய அறநிலையத்துறை எப்போதும் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்துள்ளார்.