ஈரான் : அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் வகையில் 'எகனாமிக் டி-டே' (Economic D-Day) என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent), இந்த நடவடிக்கையானது ஈரானின் எஞ்சியிருக்கும் அனைத்துப் பொருளாதாரக் கட்டமைப்புகளையும் துண்டிக்கும் இறுதி கட்ட நடவடிக்கையாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரானிய எண்ணெயை வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் கடுமையான அமெரிக்க அபராதங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஈரான் தரப்பில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா தனது பொருளாதாரப் போரைத் தொடர்ந்தால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவோ அல்லது வளைகுடாவின் வேறு எந்தப் பகுதியிலிருந்தோ ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் இந்த பொருளாதாரப் போருக்கு ஆதரவு தரும் அல்லது பங்கேற்கும் எந்தவொரு நாடும் ஈரான் மீது போர் தொடுப்பதற்குச் சமமாகப் பார்க்கப்படும் என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஏற்கனவே ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருப்பதால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவின் புதிய தடைகள் மற்றும் ஈரானின் இந்த நேரடி எச்சரிக்கை காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனா போன்ற முக்கிய நாடுகள் ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த மோதல் போக்கு உலகப் பொருளாதாரத்தில் புதிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.