துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சி மாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் நாட்டின் கொலை மிரட்டல் காரணமாக ரகசியமாக விமானத்தை மாற்றிப் பயணம் செய்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த மாதம் ஜூலை 8-ஆம் தேதி துருக்கியின் அங்காரா நகரில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பிறகு அமெரிக்கா திரும்பும்போது, டிரம்ப் மீது கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. இதனையடுத்து, பிரதான ஏர் போர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் டிரம்ப் ஏறுவது போல் நாடகம் நடத்தப்பட்டது. ஆனால், கேமராக்களின் கண்களில் இருந்து தப்பிக்க, விமானத்தின் மற்றொரு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த உணவு வழங்கும் லாரி மூலமாக டிரம்ப் ரகசியமாக இறக்கப்பட்டு, அங்கிருந்து ஒரு சிறிய இராணுவ விமானத்திற்கு (C-32A jet) மாற்றப்பட்டார்.

டிரம்ப் ரகசியமாக வேறு விமானத்தில் தப்பிச் சென்றது தெரியாமல், அவருடன் வந்த ஏறக்குறைய நூறு பேர் (ஊடகவியலாளர்கள் மற்றும் உயர் வெள்ளை மாளிகை அதிகாரிகள்) அடங்கிய குழுவினர், டிரம்ப் இருப்பதாக நம்பப்பட்ட அதே ஏர் போர்ஸ் ஒன் விமானத்திலேயே தொடர்ந்து பயணம் செய்தனர்.

ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும்போது, ஜனாதிபதி பயணம் செய்யும் பிரதான விமானத்தைப் போல இதையும் ஒரு 'டிகாய்' (Decoy - ஏமாற்றும் இலக்கு) போலப் பயன்படுத்தி, தங்களது சொந்தப் பணியாளர்களையும் நிருபர்களையும் அறியாமலேயே ஆபத்தில் சிக்க வைத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய டிரம்ப், "இது முழுக்க முழுக்க சீக்ரெட் சர்வீஸ் மற்றும் ராணுவத்தின் பாதுகாப்பு உத்தரவுப்படிதான் செய்யப்பட்டது.அவர்கள் எங்கு செல்லச் சொல்கிறார்களோ அங்கு செல்வதுதான் எனது வேலை" என்றார். மேலும், தான் பயணம் செய்த மாற்று விமானத்திற்குத்தான் ஆபத்து அதிகம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, அதிபரை காப்பாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்களையும் அதிகாரிகளையும் ஈரானின் தாக்குதலுக்கு இரையாக்கும் வகையில் இந்தத் தந்திரம் கையாளுப்பட்டிருப்பது "முன்னெப்போதும் இல்லாதது, விசித்திரமானது மற்றும் பயமுறுத்துவதாக உள்ளது" என்று கண்டனம் தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சி செனட்டர்கள், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் முறையான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.