லண்டன் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 2027-ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற 'தி ஓவல்' (The Oval) மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் இறுதிப் போட்டி 2027 ஜூன் 9 முதல் ஜூன் 13 வரை நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 2023-ம் ஆண்டு நடைபெற்ற WTC இறுதிப் போட்டியும் இதே ஓவல் மைதானத்தில்தான் நடைபெற்றது. இதன் மூலம் இந்த மைதானம் இரண்டாவது முறையாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டிக்கு விருந்தளிக்க உள்ளது.

2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது கிரிக்கெட் உலகிற்கு ஒரு மைல்கல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ஐ.சி.சி மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அடுத்த மூன்று WTC இறுதிப் போட்டிகள் (2027, 2029 மற்றும் 2031) இங்கிலாந்திலேயே நடத்தப்படவுள்ளன.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025–27 சுழற்சியின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 8 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்று 84 புள்ளிகளுடன் 87.50 சதவீத வெற்றி (PCT) பெற்று முதலிடத்தில் உள்ளது.

நடப்புச் சாம்பியனான தென்னாப்பிரிக்கா அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 36 புள்ளிகள் மற்றும் 75.00 PCT பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 6 போட்டிகளில் 72.22 PCT-யுடன் மூன்றாவது இடத்திலும், வங்காளதேசம் 58.33 PCT-யுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. இந்தியா 9 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று 48.15 PCT-யுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இலங்கை 41.67 PCT-யுடன் ஆறாவது இடத்திலும், இங்கிலாந்து 24.36 PCT-யுடன் ஏழாவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் 15.00 PCT-யுடன் எட்டாவது இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான் 4 போட்டிகளில் ஒரு வெற்றியும் பெறாமல் 8.33 PCT-யுடன் கடைசி இடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் இரண்டு இடங்களைத் தக்கவைத்திருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான முன்னேற்றத்தில் வலுவான நிலையில் உள்ளன.