243 கி.மீ மைலேஜ்... TVS iQube ST vs Simple Wave EV குடும்பங்களுக்கு யார் பெஸ்ட்?

TVS iQube ST மற்றும் Simple Wave EV ஸ்கூட்டர்களின் விலை, பேட்டரி, ரேஞ்ச், டாப் ஸ்பீடு, சார்ஜிங் நேரம், டிஸ்ப்ளே என முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Hero Image

டெல்லி : இந்திய இருசக்கர வாகன சந்தை தற்போது புதிய தலைமுறைக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகையால் விறுவிறுப்பாக இயங்கி வருகிறது. குறிப்பாக, ஒரே சார்ஜில் மிக நீண்ட தூரம் செல்லக்கூடிய பிரீமியம் இவி (EV) வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

Simple Wave EV vs TVS iQube ST.webp

இந்த வரிசையில், ஏற்கனவே சந்தையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் முதன்மை மாடலான டிவிஎஸ் ஐகியூப் எஸ்டி (TVS iQube ST) மற்றும் சந்தையில் புதிய அதிர்வலைகளைக் கிளப்பத் தயாராகியுள்ள சிம்பிள் வேவ் இவி (Simple Wave EV) ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களும் மிகக் கடுமையான போட்டியில் இறங்கியுள்ளன. இந்த இரண்டில் அதிக மைலேஜ், சிறந்த தொழில்நுட்பம் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற வண்டி எது என்பதை இந்த செய்தியில் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

விலை விவரம்

டிவிஎஸ் ஐகியூப் எஸ்டி மாடலானது ஐகியூப் குடும்பத்திலேயே மிகப்பெரிய 5.3 kWh பேட்டரி கொண்ட டாப்-எண்ட் பிரீமியம் மாடல் என்பதால், இதனுடைய விலை சற்று அதிகமாகவே உள்ளது. டெல்லியில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1.46 லட்சமாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1.78 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (மாநில அரசு மானியங்களைப் பொறுத்து ஆன்-ரோடு விலை மாறுபடலாம்). ஆரம்ப முதலீடு அதிகமாக இருந்தாலும், இது ஒரு முழுமையான பிரீமியம் லாங்-ரேஞ்ச் பேக்கேஜ் ஆகும்.

TVS iQube ST vs Simple Wave EV.webp

மறுபுறம், சிம்பிள் வேவ் இவி ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்குள் அடங்கும் வகையில் மிகவும் தாராளமான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய ஆரம்ப விலை சுமார் 1.09 லட்சம் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் தேர்வு செய்யும் பேட்டரி வேரியண்ட்டைப் பொறுத்து இதன் இறுதி விலை மாறும். அதிக பிரீமியம் விலைக்குச் செல்லாமல் பட்ஜெட் விலையில் ஒரு லாங்-ரேஞ்ச் வண்டியைத் தேடுபவர்களுக்கு சிம்பிள் வேவ் ஒரு நல்ல ஆப்ஷன் ஆகும்.

பேட்டரி மற்றும் மைலேஜ்

டிவிஎஸ் ஐகியூப் எஸ்டி மாடலில் உயர்தரமான 21700-ஃபார்மட் லித்தியம் அயன் செல்கள் கொண்ட 5.3 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், அசாத்தியமாக 212 கிலோமீட்டர் வரை மைலேஜ் (IDC Range) தரும் என்று டிவிஎஸ் நிறுவனம் சான்றளித்துள்ளது. நகர்ப்புறங்களில் தினசரி மிக நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும், அடிக்கடி சார்ஜ் செய்யப் பிடிக்காதவர்களுக்கும் இந்த மைலேஜ் மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

imple Wave EV range, TVS iQube ST range.webp

சிம்பிள் வேவ் இவி ஸ்கூட்டர் மைலேஜ் விஷயத்தில் இன்னும் ஒரு படி மேலே போய், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மொத்தம் நான்கு விதமான பேட்டரி ஆப்ஷன்களை அள்ளி வழங்குகிறது. இதனுடைய ஆரம்ப மாடல் 2.2 kWh பேட்டரியுடன் 110 கிமீ மைலேஜும், 2.7 kWh மாடல் 132 கிமீ மைலேஜும், 3.7 kWh மாடல் 171 கிமீ மைலேஜும் தருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் டாப் வேரியண்ட்டில் பெரிய 5 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 243 கிலோமீட்டர் வரை அசாத்திய மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது. மைலேஜில் சிம்பிள் வேவ் மாடலே முன்னணியில் உள்ளது.

சார்ஜிங் நேரம் மற்றும் வேகம்

டிவிஎஸ் ஐகியூப் எஸ்டி காரின் பெரிய 5.3 kWh பேட்டரியை 0-விலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 4 மணி நேரம் 18 நிமிடங்கள் ஆகும். இரவு நேரத்தில் வீட்டில் சார்ஜ் போட்டு வைப்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் வசதியாக இருக்கும்.

சிம்பிள் வேவ் இவி ஸ்கூட்டரின் சார்ஜிங் நேரம் நீங்கள் வாங்கும் பேட்டரி வேரியண்ட்டைப் பொறுத்து மாறுபடும். டாப்-எண்ட் மாடல் (5 kWh பேட்டரி): பொது இடங்களில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 0-லிருந்து 80% வரை சார்ஜ் ஆக 2 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும். அடிப்படை மாடல் (2.2 kWh பேட்டரி): இதன் பேட்டரி அளவு குறைவு என்பதால், வெறும் 70 நிமிடங்களில் 0-லிருந்து 80% வரை மிக வேகமாக சார்ஜ் ஆகிவிடும்.

வேகத்தைப் பொறுத்தவரை சிம்பிள் வேவ் இவி ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகம் (Top Speed) வரை செல்லக்கூடியது. இதனால் நெடுஞ்சாலைகளில் வண்டியை மிக வேகமாகச் செலுத்த முடியும். மறுபுறம், டிவிஎஸ் ஐகியூப் எஸ்டி ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 82 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. நகர்ப்புறச் சாலைகளுக்கு இந்த இரண்டு வண்டிகளின் வேகமுமே மிக தாராளமாகப் போதுமானது.

டிஜிட்டல் டிஸ்பிளே

தொழில்நுட்பத்தில் இரண்டுமே மாஸ் காட்டுகின்றன. டிவிஎஸ் ஐகியூப் எஸ்டி மாடலில் கார் போன்ற பிரீமியம் வசதி கொண்ட 7-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நேவிகேஷன் மேப் மற்றும் வாகன விபரங்களை டச் செய்து இயக்கலாம். மேலும், இதில் 118-க்கும் மேற்பட்ட கனெக்டிவிட்டி வசதிகள், கியூ-பார்க் அசிஸ்ட் (Q-Park Assist) மற்றும் மேடான சாலைகளில் வண்டி பின்னாடி உருளாமல் தடுக்கும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் (Hill Hold Assist) போன்ற பாதுகாப்பு வசதிகள் நிறைந்துள்ளன.

Simple Wave electric scooter gets 7 inch TFT display.webp

சிம்பிள் வேவ் இவி ஸ்கூட்டரிலும் 480 MHz ARM Cortex-M85 கிராபிக்ஸ் மைக்ரோகண்ட்ரோலர் மூலம் இயங்கக்கூடிய நவீன 7-இன்ச் டிஎஃப்டி டிஜிட்டல் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் திரையைத் தொடாமலேயே சில வசதிகளைக் கட்டுப்படுத்தும் 'நான்-டச் இன்டராக்‌ஷன்' (Non-touch interaction) தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, மியூசிக் மற்றும் கால் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. மேலும், இதில் மாத்திரைகள் மற்றும் அவசர மருந்துகளைப் பாதுகாப்பாக வைக்க பில் ஸ்டோரேஜ் (Pill Storage) என்ற பிரத்யேக வசதியும் உள்ளது கூடுதல் ஸ்பெஷல் ஆகும்.

குடும்பப் பயன்பாடு

டிவிஎஸ் ஐகியூப் எஸ்டி முற்றிலும் குடும்பங்களை மனதில் வைத்து, அனைவரும் எளிதாக ஓட்டும் வகையில் ஒரு முதிர்ச்சியான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சீட்டிங் பொசிஷன் மிகவும் சொகுசானது மற்றும் சீட்டுக்கு அடியிலும் தாராளமான ஸ்டோரேஜ் வசதி உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களால் இந்த பிராண்ட் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Simple Wave electric scooter.webp

சிம்பிள் வேவ் இவி ஸ்கூட்டரும் குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வலுவான சேசிஸ் மற்றும் 775 மிமீ என்ற நேர்த்தியான சீட் உயரத்தைக் கொண்டுள்ளது. இந்தியச் சாலைகளில் இருக்கும் பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் வண்டியின் அடிப்பகுதி தட்டாமல் இருப்பதற்காக 175 மில்லிமீட்டர் என்ற மிகச் சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground Clearance) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. உயரக் குறைவான நபர்களும், பெண்களும் இந்த வண்டியை மிகவும் எளிதாகக் கையாள முடியும்.

இரண்டில் யாருக்கு எது பெஸ்ட்?

உங்களுக்கு மணிக்கு 90 கிமீ என்ற கூடுதல் வேகம் வேண்டும், உங்களது தினசரி பயணத் தேவைக்கேற்ப பேட்டரி ஆப்ஷனை (2.2 kWh முதல் 5 kWh வரை) பட்ஜெட் விலையில் தேர்வு செய்ய வேண்டும் மற்றும் டச் இல்லாத டிஸ்ப்ளே தொழில்நுட்பம் போன்ற புத்தம் புதிய வசதிகளை விரும்பினால் நீங்கள் தாராளமாக சிம்பிள் வேவ் இவி (Simple Wave EV) மாடலைத் தேர்வு செய்யலாம்.

ஆனால், பட்ஜெட் உங்களுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை, எனக்கு இந்தியாவில் எங்கும் கிடைக்கக்கூடிய மிக வலுவான சர்வீஸ் நெட்வொர்க் சப்போர்ட் வேண்டும், கார் போன்ற 7-இன்ச் டச் ஸ்கிரீன் வசதியும், சந்தையில் ஏற்கனவே 10 லட்சம் வாடிக்கையாளர்களால் நம்பப்பட்ட ஒரு பிராண்டட் ஃபேமிலி ஸ்கூட்டர் வேண்டும் என்று விரும்புபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு டிவிஎஸ் ஐகியூப் எஸ்டி (TVS iQube ST) மாடலைத் தேர்வு செய்யலாம்.

243 கி.மீ மைலேஜ்... TVS iQube ST vs Simple Wave EV குடும்பங்களுக்கு யார் பெஸ்ட்?