வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலகின் மிக முக்கிய எண்ணெய் வர்த்தக வழித்தடமான ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz), தனது பெயரைச் சூட்டி ‘ட்ரம்ப் நீரிணை’ (TRUMP STRAIT) எனப் பெயர் மாற்றப் பரிந்துரை செய்துள்ளார். இது தங்களது கட்டுப்பாட்டில் தற்போது இருப்பதால், ஹோர்முஸ் நீரிணை முன்பை விட மிகவும் சூடாக (பரபரப்பாக) இருக்கும் என்றும் அவர் தனது 'ட்ரூத்' சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிபரின் இந்த விசித்திரமான அறிவிப்பு மற்றும் ஈரான் உடனான போர்ச் சூழல் அமெரிக்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் கடுமையாக தங்களுடைய கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதிபர் ட்ரம்பின் இந்தப் பெயர் மாற்றப் பரிந்துரைக்கு அமெரிக்காவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ட்ரம்பைச் சாடிப் பேசியுள்ள அவர், "இல்லை மிஸ்டர் ட்ரம்ப், அமெரிக்க மக்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு உங்களது பெயரைச் சூட்ட விரும்பவில்லை; நீங்கள் அமெரிக்காவின் அதிபர், ஏதோ ஒரு பைத்தியக்கார ராஜா (Mad King) அல்ல, முதலில் அதிபரைப் போலப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்" என்று மிக ஆவேசமாக விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய பெர்னி சாண்டர்ஸ், அமெரிக்க மக்கள் தற்போது தேவையற்ற பெயர் மாற்றங்களை எதிர்பார்க்கவில்லை என்றும், ஈரானில் ட்ரம்ப் நடத்தி வரும் சட்டவிரோதமான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றே விரும்புவதாகவும் குறிப்பிட்டார். இந்த தேவையற்ற போர்ச் சூழல் காரணமாக அமெரிக்காவில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தற்போது அங்கு ஒரு கேலன் டீசல் விலை 5.69 டாலராகவும், பெட்ரோல் விலை 4.12 டாலராகவும் உயர்ந்து பொதுமக்களைக் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றொரு மூத்த ஜனநாயகக் கட்சித் தலைவரான சக் ஷுமர், ட்ரம்பின் இந்தப் பெயர் மாற்றப் முயற்சியை மிகத் தீவிரமாகக் கண்டித்துள்ளார். "இங்குள்ள நீர்நிலைகளுக்குப் புதிய பெயர்களைச் சூட்ட வேண்டிய அவசியம் எதுவும் இப்போது இல்லை" என்று கூறிய அவர், ஈரான் நாட்டுடன் நடந்து வரும் இந்த மோதலை அமெரிக்க மக்கள் ஏற்கனவே 'ட்ரம்ப்பின் போர்' (TRUMP’S WAR) என்று தான் அழைத்து வருகிறார்கள் என்றார்.
மேலும், அதிபர் ட்ரம்ப் அமெரிக்க மக்களின் உண்மையான துயரங்களையும், தவிப்புகளையும் தீர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சக் ஷுமர் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் நலனை விடவும், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விடவும், தனது சொந்த சுய விளம்பரத்திற்கும் அகந்தைக்கும் (Ego) தீனி போடுவதில் தான் அதிபர் ட்ரம்ப் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார் என்று அவர் தனது கடுமையான கண்டனத்தை அவையில் பதிவு செய்துள்ளார்.
