டெல்லி:ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய குறைகளைத் தீர்க்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஏத்தர் கம்யூனிட்டி டே' (Ather Community Day) நிகழ்வில் இந்த புதிய மற்றும் பிரம்மாண்டமான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஏத்தர் கோனார்க் (Ather Konarc) என்ற புதிய ஸ்கூட்டரை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது பலருக்கும் தெரிந்ததே. தற்போது அந்த ஸ்கூட்டரைத் தாண்டி எலக்ட்ரிக் வாகனச் சந்தையையே மாற்றும் வகையிலான தொழில்நுட்பங்களை ஏத்தர் நிறுவனம் விரிவாக விளக்கியுள்ளது.
அபார்ட்மெண்ட் சார்ஜிங் பிரச்சனைக்குத் தீர்வு
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சார்ஜிங் வசதி இல்லாமல் இருப்பதுதான். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏத்தர் நோட் (Ather Node) என்ற புதிய சார்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே குடியிருப்பில் சுமார் ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்களை ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்த முடியும். குடியிருப்பின் மின்சார அளவைக் கணக்கிட்டு, ஒவ்வொரு வாகனத்திற்கும் தேவையான மின்சாரத்தை இந்தத் தொழில்நுட்ப முறை (System) தானாகவே பிரித்து வழங்கும்.
ஒரு ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் ஆனதும், அதற்கான மின்சாரத்தைத் துண்டித்து, சார்ஜ் குறைவாக உள்ள மற்ற வாகனங்களுக்கு இது தானாகவே திருப்பிவிடும். இதனால் ஒரே நேரத்தில் அதிக மின்சாரம் எடுக்கப்படாமல் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் அனைத்து வாகனங்களும் சார்ஜ் செய்யப்படும்.
இதன் மூலம் குடியிருப்பின் முக்கிய மின் இணைப்பு ஓவர்லோடு ஆகி மின் தடை (Trip) ஆவது முழுமையாகத் தவிர்க்கப்படுகிறது. எனவே, பல லட்சம் செலவு செய்து புதிய மின்மாற்றி (Transformer) அமைக்காமலேயே அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எளிதாக சார்ஜர்களைப் பயன்படுத்தலாம்.
10 ஆண்டுகள் பேட்டரி வாரண்டி
சார்ஜிங் பிரச்சனைக்கு அடுத்தபடியாகப் பலரும் பயப்படுவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி ஆயுட்காலத்தைக் குறித்துத்தான். இதைப் போக்குவதற்காக பெட்ராக் பேட்டரி (Bedrock Battery) என்ற ஐந்தாம் தலைமுறை பேட்டரி அமைப்பை ஏத்தர் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த புதிய பேட்டரிகளுக்கு சுமார் 10 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் வரை வாரண்டியை ஏத்தர் வழங்குகிறது. வாகன விபத்துகளின் போது பேட்டரியில் ஏற்படும் நுண்ணிய பாதிப்புகளைக் கண்டறியும் தொழில்நுட்பமும் இதில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் புரட்சி
இந்த புதிய பேட்டரித் தொழில்நுட்பம் வாகனத்தின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி பாதுகாப்பையும் பல மடங்கு உறுதி செய்கிறது. ஏத்தர் நிறுவனத்தின் இந்தத் தொடர் அறிவிப்புகள் எலக்ட்ரிக் வாகனப் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
வெறும் புதிய வாகனங்களை மட்டும் அறிமுகப்படுத்தாமல் பயனர்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் ஏத்தர் நிறுவனம் தீர்வு கண்டுள்ளது. இதன் மூலம் இந்திய எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் ஓலா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களுக்கு ஏத்தர் கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
