நடிகர் சூர்யா அவர்கள், புனீத் ராஜ் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
கன்னட திரையுலகின் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வாரம் தனது வீட்டில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நெஞ்சு வலி காரணமாக கீழே சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
பின் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர் சினிமா ரசிகர்களை மிகப்பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தியது.நடிகர் புனித் ராஜ்குமார் 48 இலவச பள்ளிக்கூடங்கள், 20 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், சுமார் 1,800 மாணவ மாணவியரின் கல்வி என தன் வருமானத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் சூர்யா அவர்கள், புனீத் ராஜ் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘இப்படி நடந்திருக்கவே கூடாது. எங்கள் இருவர் குடும்பமும் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். என் அம்மா வயிற் றில் நான் 4 மாதக் குழந்தையாக இருந்தபோது புனித் அவர் அம்மா வயிற்றில் 7 மாதக் குழந்தையாக இருந்தார் என்று எனக்கு என் அம்மா சொன்னது நினைவில் இருக்கிறது. புனித்துக்கு இப்படி நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.’ என தெரிவித்துள்ளார்.