28 விக்கெட் எடுத்தும் இந்திய அணியில் இடமில்லை?புறக்கணிப்பு குறித்து புவனேஷ்வர் குமார் சொல்வதென்ன?

நான் இன்னும் விளையாட ஆசைப்படுகிறேன் என்பதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாததுதான் என் குணம் என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

Hero Image

டெல்லி : கடந்த மே 31 அன்று அகமதாபாத்தில் நடந்த விறுவிறுப்பான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. இந்த அசாத்தியமான வெற்றிப் பயணத்தில், ஆர்சிபி அணியின் பந்துவீச்சுப் படையை முன்னின்று வழிநடத்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கான காலம் இன்னும் முடியவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளார்.

தொடர்ந்து இந்திய அணியின் அடுத்தடுத்த போட்டிக்களில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையிலும், ஐபிஎல் 2026-ல் அவர் காட்டிய அவருடைய அசத்தலான பந்துவீச்சு மற்றும் இந்திய அணி கம்பேக் குறித்து 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள எதார்த்தமான பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புவி கம்பேக்

கடந்த 2025 சீசனில் ஆர்சிபி அணிக்காக 17 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்த புவனேஷ்வர் குமார், இந்த 2026 சீசனில் தனது அசாத்திய பந்துவீச்சால் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரையும் மிரள வைத்தார்.

விக்கெட்டுகள் வேட்டை: இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடி 28 விக்கெட்டுகளை வாரிக் குவித்தார். இதன் மூலம் பர்பிள் கேப் (Purple Cap) பந்தயத்தில் வெறும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தினார்.

இந்த சீசனில் புவி தனது வழக்கமான ஸ்விங் பாணியில் இருந்து மாறி, 'வொப்ளி சீம்' (Wobble Seam) உத்தியை மிகத் துல்லியமாகப் பயன்படுத்தினார். பந்து உள்ளே வருமா அல்லது வெளியே போகுமா என்று பேட்டர்களால் கணிக்கவே முடியாத அளவுக்கு அவரது லைன் அண்ட் லென்த் மிகவும், கச்சிதமாக இருந்தது.

இப்படி சிறப்பான பார்மில் இருக்கும் புவி ஐபிஎல் தொடரில் இவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகும், அடுத்து வரவிருக்கும் இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான (Asian Games) இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், புவி மிகவும் நிதானமாகப் பதிலளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் " நான் இன்னும் விளையாட ஆசைப்படுகிறேன் என்பதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாதது தான் என் குணம். இங்கு எல்லாரும் அவங்க அவங்க வேலையைச் சரியாகச் செய்கிறார்கள். தேர்வுக் குழுவினர் (Selectors) அவங்க வேலையைப் பார்க்கிறார்கள், நான் என் வேலையைப் பார்க்கிறேன். அணியைத் தேர்ந்தெடுப்பது அவங்களுடைய பொறுப்பு. நான் தகுதியானவன் என்று அவர்கள் நினைத்தால், கண்டிப்பாக அவங்க வேலையை அவங்க செய்வாங்க" என நிதானமாக பதில் அளித்தார்.

மேலும், தொடர்ந்து பேசிய புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா என்பது தன் கையில் இல்லை என்றாலும், இதுவரை நாட்டுக்காக விளையாடிய நாட்களைத் தான் என்றும் நன்றியோடு நினைத்துப் பார்ப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் " நான் விளையாடி முடித்துவிட்டேன், நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துவிட்டேன். ஒருவேளை நான் இந்தியாவுக்காக விளையாடாமல் இருந்திருந்தால், எப்படியாவது ஒரு போட்டியிலாவது விளையாட மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டு இருந்திருப்பேன்.

இந்தியாவுக்காக விளையாடுவது என்பது மிக பிரம்மாண்டமான ஒரு விஷயம், அதை நான் சாதாரண ஒன்றாகக் கருத மாட்டேன். இந்திய அணியிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற சில அதிர்ஷ்டசாலி மனிதர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்குப் பெருமைதான்," என்று புவி உருக்கமாகக் கூறியுள்ளார்.

28 விக்கெட் எடுத்தும் இந்திய அணியில் இடமில்லை?புறக்கணிப்பு குறித்து புவனேஷ்வர் குமார் சொல்வதென்ன?