மெர்சல் மீதான தடை நீக்கம் : விஜய் உள்ளிட்ட படக்குழு,ரசிகர்கள் கொண்டாட்டம்…!
இளைய தளபதி விஜய் தளபதியாக மாறி நடித்துள்ள மெர்சல் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் படக்குழு நிம்மதி அடைந்துள்ளது. தெறியை தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் உலகளவில் டிரண்ட்டாகி, அதிக பார்வையாளர்கள், லைக்ஸ்… என சாதனை மேல் சாதனை படைத்தது. பட ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வந்த நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ஏ.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் “மெர்சலாயிட்டேன்” என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வருகிறேன். இதற்கான தலைப்பை 2014-ம் ஆண்டிலே பதிவு செய்திருக்கிறேன். அந்த தலைப்பை விஜய் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். ஆகவே, மெர்சல் படத்தின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தமது மனுவில் கோரியிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மெர்சல் படத்தின் தலைப்பை பயன்படுத்த இடைக்கால தடை விதித்திருந்தோடு, இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மெர்சல் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் மெர்சல் தலைப்பு வேறு, மெர்சலாயிட்டேன் தலைப்பு வேறு என வாதிடப்பட்டது. அதேப்போன்று ராஜேந்திரனும் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார். இருவரின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்ற நிலையில் வழக்கின் மீதான இறுதி தீர்ப்பு இன்று(அக்., 6) அறிவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி மெர்சல் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அதில், மெர்சல் படத்தின் பெயருக்கு தடையில்லை, அந்த பெயரிலேயே படத்தை ரிலீஸ் செய்யலாம் என நீதிமன்றம் கூறியதோடு, தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பு மெர்சல் படக்குழுவுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. இதையடுத்து படம் ரிலீஸ்க்கான வேலைகளை தேனாண்டாள் பிலிம்ஸ் இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறது.