சென்னை :‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் ராயல்டி சர்ச்சை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு ஆல்பம் பாடலாக வெளியான இப்பாடல், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், பாடலாசிரியர்-பாடகர் தெருக்குரல் அறிவு வரிகள் எழுதி பாடியதாக அறியப்பட்டது. பாடல் வெளியான காலம் முதல் ராயல்டி, காப்புரிமை, பணப் பகிர்வு தொடர்பான பிரச்சினை நீடித்து வருகிறது.
தெருக்குரல் அறிவு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “பாடலின் ராயல்டி மற்றும் உரிமைகள் பாடலை உருவாக்கிய மற்ற கலைஞர்களிடம் இருக்கும் நிலையில், எனக்கு இதுவரை எந்த ஊதியமோ அல்லது உரிமையோ வழங்கப்படவில்லை. இது அனுதாபத்திற்காக அல்ல; உழைப்பின் கண்ணியத்திற்காக. வளரும் கலைஞர்கள் ஒப்பந்தங்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குற்றச்சாட்டியுள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இதற்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “பாடலின் கருப்பொருள் இயக்குநர் மணிகண்டனுடையது. மெட்டுகள் தீ மற்றும் என்னால் உருவாக்கப்பட்டது. பாடலைத் தயாரித்து, அனைத்து மெட்டுகளையும் உருவாக்கியது நான்தான். அறிவு வரிகளை மட்டும் எழுதிப் பாடினார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் மேலும் கூறியதாவது, “உன்னுடைய அனைத்து தொழில்நுட்ப மற்றும் சட்டப்பூர்வமான வாதங்களும் தவறானவை. எந்த ஊடகத்தில் வேண்டுமானாலும் ஆதாரங்களுடன் என்னுடன் விவாதிக்கத் தயாரா?” என்று சவால் விடுத்துள்ளார். இந்த வார்த்தை மோதல் X தளத்தில் தீவிரமடைந்துள்ளது.
பாடலாசிரியர்-பாடகர் அறிவு தனது உழைப்புக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டியுள்ள நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது முழு பங்களிப்பை வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் கலைஞர்களுக்கான ராயல்டி உரிமை, ஒப்பந்த வெளிப்படைத்தன்மை குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
