சென்னை : சென்னையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் அரசியல் நடவடிக்கைகளை ஜேம்ஸ் வசந்தன் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) மதியம் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஜேம்ஸ் வசந்தன் இது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது“நான் பாலவாக்கத்தில் குடியிருக்கிறேன். பாலவாக்கம் கடற்கரைக்கு அருகில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்கு நானும் என் மனைவியும் வெகு தூரம் செல்ல வேண்டாம் என்று, ECR மெயின் ரோடில் உள்ள ஒரு உணவகத்திற்குச் செல்ல முடிவு செய்தோம். பாலவாக்கத்தில் இருந்து கார் எடுத்துச் சென்று, கொட்டிவாக்கம் தாண்டி திருவான்மியூர் அருகில் உள்ள அந்த உணவகத்துக்கு முன்பாக சாலை ஓரத்தில் கார் நிறுத்தினோம்.
அப்போது மணி சரியாக ஒன்று. உணவகத்துக்கு முன்பாக இடம் இல்லாததால், அருகில் உள்ள காலி மனைக்கு முன்பாக (blue sheet போட்டிருந்த இடம்) காரை நிறுத்திவிட்டு நடந்து சென்றோம். சாலை போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்தோம்.உணவு முடித்து வெளியே வந்தபோது மணி இரண்டு. அப்போது காரின் இடது பக்க பின் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம். உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமா வேண்டாமா என்று மனைவியுடன் பேசினோம்.
அங்கு கூப்பிட்டால் 15-20 நிமிடங்கள் ஆகும், அதுவரை கூட்டம் சேர்ந்து தேவையற்ற பரபரப்பு ஏற்படும் என்பதால், காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தோம். பின்னர் வீட்டில் இருந்தபடியே அந்த வீடியோவை எடுத்து எனது பேஸ்புக்கில் பதிவிட்டேன்.” என தெரிவித்தார்.
மேலும், ஜேம்ஸ் வசந்தன் மேலும் கூறுகையில், “உடைக்கப்பட்ட கண்ணாடிக்குள் ஒரு கல் இருந்தது. அந்தக் கல்லைப் பார்க்கும்போது, மிகப் பலமாக அடித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கல்லை எடுத்து வைத்துள்ளோம். காவல் துறைக்கு புகார் அளித்துள்ளேன்.இந்தச் சம்பவத்தைச் செய்தவர்கள் வெறும் சமூக விரோதிகளா அல்லது உள்நோக்கத்துடன் செய்த கட்சியினரா என்பது தெரியவில்லை.
ஏனென்றால், சமீபத்தில் தேர்தலை ஒட்டி தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விஜயை நான் கடுமையாக விமர்சித்திருந்தேன். அதனால் யாராவது எரிச்சலடைந்து இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என்று யோசிக்கிறேன். காவல் துறை விசாரணையில் உண்மை தெரியும். அதன் பிறகு அவர்களுக்கு நான் சொல்ல வேண்டிய அறிவுரையை நிச்சயம் சொல்வேன்” என்றார்.இந்தச் சம்பவம் தொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் காவல் துறைக்கு புகார் அளித்துள்ளார். போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
