தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை.!
தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு : கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 3-ம் தேதி அன்று, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவர் துபாயிலிருந்து வந்த விமானத்தில் 14.8 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்ததாக சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 34 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தல் முயற்சி, சுங்கத் துறையின் கடுமையான கண்காணிப்பின் மூலம் அம்பலமானது. ரன்யா ராவ் மீது, தங்கத்தை மறைத்து வைத்து, உரிய அனுமதி இன்றி இந்தியாவுக்கு கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருக்கு சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத் துறையால் (Enforcement Directorate – ED) முடக்கப்பட்டன.
இந்த சொத்துக்கள், கடத்தல் மூலம் பெறப்பட்டவை என சந்தேகிக்கப்படுவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, ரன்யா ராவ் தங்கக் கடத்தலில் தொடர்புடைய ஒரு பெரிய கடத்தல் கும்பலின் ஒரு பகுதியாக செயல்பட்டதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்தன.
இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து, ரன்யா ராவ் குற்றவாளி என உறுதி செய்தது. பின்னர், அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்ததோடு, இந்தக் காலத்தில் ஜாமீன் கோருவதற்கு அனுமதி மறுத்தது. இவரது கைது மற்றும் தண்டனை நடிவடிக்கை, கன்னட திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கோவை மாணவி கூட்டு வன்கொடுமை – 7 பேருக்கு வாழ்நாள் சிறை.!
July 18, 2025