ஒரு ரூபாய் கூட குறைய கூடாது...சம்பளத்தில் கறார் காட்டும் மிஷ்கின்!

பிசாசு 2'உள்ளிட்ட படங்கள் வெளியாகத் தடையானதால், மிஷ்கின் தற்போது முழுநேரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Hero Image

சென்னை : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராகவும், வித்தியாசமான பேச்சுகளால் ரசிகர்களை கவர்பவராகவும் இருக்கும் மிஷ்கின் குறித்து தற்போது புதிய தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, அவர் நடிகராக அதிக படங்களில் நடிக்க தொடங்கியிருப்பதற்கும், தயாரிப்பாளர்கள் மத்தியில் பேசப்படும் சம்பள சர்ச்சைக்கும் காரணம் என்ன என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “பரிமளா & கோ” திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை நடைபெற்றது. ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, அனந்திகா, சாண்டி உள்ளிட்டோருடன் மிஷ்கினும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசிய சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றன. குறிப்பாக, “பாண்டிராஜ் இயக்கிய படங்களை நான் பார்த்ததில்லை” என்று அவர் வெளிப்படையாக கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கிடையில், மிஷ்கின் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடிகராக நடித்து வருவதற்கான காரணமும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவர் இயக்கிய “பிசாசு 2” உள்ளிட்ட சில படங்கள் நீண்ட காலமாக வெளியீட்டை காணாமல் இருப்பதால், அதற்கிடையில் நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

முழுநேர நடிகராக மாறவில்லை என்றாலும், தனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் மிஷ்கின். குறிப்பாக, character role-களில் அவருக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.ஆனால், அவரை நடிகராக ஒப்பந்தம் செய்வதில் தயாரிப்பாளர்கள் சற்று தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முக்கிய காரணம் அவர் கேட்கும் சம்பளம் என கூறப்படுகிறது.

சினிமா வட்டாரங்களில் பரவி வரும் தகவலின்படி, மிஷ்கின் தற்போது ஒரு நாளைக்கு அதிக தொகை சம்பளமாக கேட்கிறாராம். அதிலும் எந்த சமரசமும் இல்லாமல், “ஒரு ரூபாய் கூட குறைக்க முடியாது” என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக பேசப்படுகிறது.இதனால், மிஷ்கினை வைத்து படம் எடுக்க பலருக்கும் விருப்பம் இருந்தாலும், அவர் கேட்கும் சம்பளத்தை கேட்ட பிறகு சில தயாரிப்பாளர்கள் பின்வாங்கி விடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த சம்பள பிரச்சனைகள் மற்றும் பல தடைகளை தாண்டி, மிஷ்கின் மீண்டும் இயக்குநராக புதிய படம் ஒன்றை தொடங்கும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், மிஷ்கின் – அருண் விஜய் கூட்டணி உருவானால் அது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஒரு ரூபாய் கூட குறைய கூடாது...சம்பளத்தில் கறார் காட்டும் மிஷ்கின்!