சென்னை :தவெக தலைவர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் முடிவுக்கு தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு. தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு தணிக்கை வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இதனால் படத்தின் வெளியீடு மீண்டும் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.
தனி நீதிபதி உத்தரவில் மனுவில் கோரப்படாத நிவாரணத்தை அளித்துள்ளதாக தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்காமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே தயாரிப்பாளர் வெளியீட்டுத் தேதியை நிர்ணயித்தது ஏன் என்றும், அதற்காக அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டுமா என்றும் தணிக்கை வாரியம் தரப்பில் கடுமையாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் தரப்பில், பல்வேறு நடைமுறைகள் இருக்கும் போது பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. பதில் அளிக்க 2 அல்லது 3 நாட்கள் அவகாசம் அளிக்க உரிமை இல்லையா என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது.
வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்த தலைமை நீதிபதி அமர்வு, படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது தொடர்பான உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த படத்தின் ரிலீஸ் மீண்டும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. படக்குழு தரப்பில் ஏற்கனவே அனைத்து மாற்றங்களும் செய்யப்பட்டுவிட்டதாக வாதிடப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி அமர்வின் இந்த உத்தரவு படத்தின் வெளியீட்டுக்கு பெரும் தடையாக அமைந்துள்ளது. அரசியல் உள்நோக்கம் கொண்ட தாமதம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், வழக்கு ஒத்திவைப்பு அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்த்துள்ளது. படக்குழு தரப்பில் மேல்முறையீட்டுக்கு எதிராக வாதிட உள்ளது.ஜனவரி 21ஆம் தேதி விசாரணைக்கு வரும் இவ்வழக்கின் முடிவு படத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த ஒத்திவைப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
