ஜனநாயகன் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு...சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!

நாளை வெளியாக இருந்த விஜயின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

jana nayagan postponed

சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ நாளை (ஜனவரி 9, 2026) உலகமெங்கும் வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. எச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். டிரெய்லர் வெளியானதும் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்த நிலையில், டிக்கெட் முன்பதிவும் தமிழ்நாடு தவிர பல இடங்களில் தொடங்கியது.

ஆனால், தற்போது படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் (CBFC Certificate) இதுவரை வழங்கப்படாததே இத்தாமதத்திற்கு முக்கிய காரணம். கடந்த மாதமே படத்தை மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு சமர்ப்பித்த போதிலும், சில காட்சிகள் மற்றும் டயலாக்குகளில் மாற்றம் கோரப்பட்டது. படக்குழு அவற்றை செய்து மீண்டும் அனுப்பியும் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் முன்பதிவு தொடங்கவே இல்லை, வெளிநாடுகளிலும் கேரளா, கர்நாடகாவிலும் மட்டுமே புக்கிங் நடந்தது.

இந்தச் சூழலில் திட்டமிட்ட தேதியில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, திட்டமிட்ட நாளில் படத்தை வெளியிட அனுமதி கோரி கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தது. மேலும், படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக வந்த புகாரையும் தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. தீர்ப்பு வரும் முன்பே சான்றிதழ் கிடைக்காததால், நாளை ரிலீஸ் செய்ய முடியாது என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னை தீரும் வரை படத்தை வெளியிட முடியாது என்றும், விரைவில் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு சான்றிதழ் கிடைத்தால் உடனடியாக புதிய தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒத்திவைப்பு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் இறுதித் திரைப்படம் என்பதால் ‘ஜனநாயகன்’ மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. சமூக வலைதளங்களில் #ReleaseJanaNayagan என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்த நிலையில், தற்போதைய ஒத்திவைப்பு அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பில் முழு ஒத்துழைப்பு அளித்தும் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நிலைமை தெளிவாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு...சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!