வெளியாகுமா ஜனநாயகன்? சென்சார் கோரும் வழக்கு நாளை ஒத்திவைப்பு!

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கோரும் வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் உயர்நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது.

jana nayagan censor issue

நடிகரும் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவருமான விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ ஜனவரி 9, 2026 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அரசியல் களத்தில் முழு நேர அரசியலுக்கு தயாராகும் விஜயின் இறுதிப் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரெய்லர் வெளியானதும் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. ஆனால், வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

படத்தை கடந்த டிசம்பர் 19ஆம் தேதி தணிக்கை குழு பார்வையிட்டு, சில காட்சிகளில் வன்முறை குறைக்கவும், சில டயலாக்குகளை மியூட் செய்யவும் பரிந்துரைத்தது. படக்குழு அவற்றை செய்து மீண்டும் சமர்ப்பித்த போதிலும், ஜனவரி 6, 2026 வரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை, வெளிநாடுகளிலும் கர்நாடகா, கேரளாவிலும் மட்டுமே புக்கிங் நடந்தது.

தவெக தரப்பில் இது வேண்டுமென்றே செய்யப்படும் தாமதம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனால் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. ஜனவரி 6 மதியம் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படியான சூழலில், நீதிமன்றம் நாளை (ஜனவரி 7) க்கு ஒத்திவைத்தது.

ஏனென்றால், ஜனநாயகன் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக வந்த புகாரை, சென்னை உயர்நீதிமன்றம் தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளது. இப்புகார் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், இது தணிக்கை தாமதத்திற்கு கூடுதல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. படத்தில் அரசியல் கருத்துகள் அதிகம் இடம்பெற்றுள்ளதால், சர்ச்சைகள் எழுந்துள்ளன.

சான்றிதழ் பிரச்னை தீர்ந்தால் ஜனவரி 9 ஆம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு உறுதியளித்துள்ளது. கேரளா, கர்நாடகா, வெளிநாடுகளில் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.