சென்னை : வெயில் ஒரு பக்கம் வாட்ட, மறுபக்கம் அவ்வப்போது பெய்யும் மழையென வானிலை இந்த நாட்களில் மாறி மாறி விளையாடுகிறது. இந்த க்ளைமேட் சேஞ்ச் நேரத்தில், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி சற்றே குறைய வாய்ப்புள்ளது.
இதனாலேயே இந்த வானிலை மாற்றத்தில் நமக்கு சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை நம்மைப் பாடாய்படுத்துகின்றன. இதிலிருந்து தப்பிக்க, நாம் கவனிக்க வேண்டிய எளிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்
உடல்நிலையைப் பாதுகாக்க சில சிம்பிள் டிப்ஸ்:
வெதுவெதுப்பான நீர்: இந்த சீசனில் குளிர்ந்த நீரைத் தவிர்த்து, காய்ச்சி ஆறவைத்த அல்லது வெதுவெதுப்பான சுடுநீரைப் பருகுவது சுவாசப் பாதைக்கு மிகவும் நல்லது.
கை சுத்தம்: வெளியில் சென்று வந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு கழுவும் பழக்கத்தை கட்டாயம் கடைப்பிடியுங்கள். வைரஸ்கள் நம் கை வழியாகவே அதிகம் உடலுக்குள் நுழைகின்றன.
ஆவி பிடித்தல்: மூக்கடைப்பு அல்லது சளி இருப்பது போன்ற உணர்வு இருந்தால், இரவில் படுக்கும் முன் வெறும் வெந்நீரில் ஆவி பிடியுங்கள். இது உடனடி நிவாரணம் தரும்.
தூக்கம் முக்கியம்: உங்கள் உடலுக்குத் தகுந்த ஓய்வு கொடுங்கள். போதுமான அளவு தூக்கம் இருந்தால்தான், உடல் வைரஸை எதிர்த்துப் போராடும் சக்தியைப் பெறும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
நோயிலிருந்து சீக்கிரம் மீள வேண்டுமானால், சில உணவுகளை இந்த நாட்களில் தவிர்ப்பது இந்த சமயம் மிகவும் நல்லது. அதில் குறிப்பாக இருக்கும் சில உணவுகளை பற்றி இதில் பார்ப்போம்.
குளிர்சாதனப் பெட்டி உணவுகள்: ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் அதிக குளிர்ச்சியான பழங்களை இந்தக் காலகட்டத்தில் தள்ளி வையுங்கள்.
எண்ணெயில் பொரித்த உணவுகள்: வடை, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த தின்பண்டங்கள் ஜீரணமாவதற்கு அதிக ஆற்றலை எடுத்துக்கொள்ளும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும்.
தெருவோர உணவுகள்: திறந்த நிலையில் இருக்கும் உணவுகளில் தூசி மற்றும் கிருமிகள் எளிதில் படிந்திருக்கும். அது இந்த வானிலையில் தொற்றுக்கு முக்கிய காரணமாகும்.
பழைய உணவுகள்: சமைத்த உணவுகளை நீண்ட நேரம் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். சமைத்த சில மணி நேரங்களுக்குள் சாப்பிட்டு விடுவது நல்லது.
எப்போது மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?
"வீட்டு வைத்தியம் என்பது நோய் வராமல் தடுப்பதற்கும், லேசான பாதிப்புகளுக்கும் மட்டுமே. காய்ச்சல் 48 மணி நேரத்திற்கு மேல் குறையாமல் இருந்தாலோ, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலோ, தசை வலி அதிகமாக இருந்தாலோ, நீங்களே சுயமாக மாத்திரைகளை வாங்கிக் குடிக்காதீர்கள். தயங்காமல் உங்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகுவதுதான் பாதுகாப்பானது," என்று பொது மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
