பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!
பாகிஸ்தான் ராணுவம் இதுவரை காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் நடத்தப்பட்டது. அது முதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியது. ஆனால், இதில் 31 பாகிஸ்தானிய பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறி இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கிவிட்டது பாகிஸ்தான். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் பதில் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள், பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் வேளையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மீது போர் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் மே 7 ஆபரேஷன் சிந்தூரை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் மேற்கொண்ட எல்லை மீறிய தாக்குதலில் இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மே 7ஆம் தேதியன்றே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 சிறார்கள் , ஒரு ராணுவ வீரர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர் என செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் , குஜராத் என பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் தொடர் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. அதனை இந்திய ராணுவம் தடுத்து பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை ஆயுதங்களை அழித்து வருகின்றன.
இருந்தும் எல்லைப்பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் வசிக்கும் காஷ்மீர் மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர் துப்பாக்கி சூடு ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில் இதுவரை 22 பேர் (மே 7 முதல்) உயிரிழந்ததாக தனியார் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலையில் கூட ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, அரசு ஊழியர் ஒருவர் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தார் என வருத்தம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தாக்குதலை இந்திய ராணுவம் தடுத்து ஆயுதங்களை அழித்தாலும், பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மீது நேரடியாக நடத்தும் தாக்குதலில் சில உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.