வணிக மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களுக்கான விலை உயர்வு.
தேர்தல் நிறைவு – சிலிண்டர் விலை உயர்வு:
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுராவில் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்து உள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்:
அதன்படி, சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.1068-ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1118.50-ஆக அதிகரித்துள்ளது.
வணிக சிலிண்டரின் விலை:
இதுபோன்று 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.351 அதிகரித்து, கடந்த மாதம் ரூ.1,917ஆக இருந்த வணிக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.2268 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
டெல்லி நிலவரம்:
டெல்லியில் வீட்டு உபயோக 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை யூனிட்க்கு ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.1,103க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக ரீதியான 19 கிலோ-எல்பிஜி சிலிண்டரின் விலையும் ரூ.350.50/யூனிட் உயர்த்தப்பட்டு, தேசிய தலைநகரில் ரூ.2,119.50/யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வால், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற அச்சமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.