தேசிய கீதம் தொடர்பான வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தேசிய கீதத்தை அவமதித்தது தொடர்பான வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த நிகழ்ச்சியின் போது, மம்தா பானர்ஜி அமர்ந்த நிலையில் தேசிய கீதத்தை பாட ஆரம்பித்துவிட்டு, பின்னர் நின்றதாக பாஜக தலைவர் விவேகானந்த் குப்தா மாவட்ட நீதிமன்றத்தில் புகார்மனு தாக்கல் செய்தார்.
குப்தாவின் புகாரின் பேரில் மாவட்ட நீதிமன்றம் மம்தா பானர்ஜிக்கு சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி, மாவட்ட நீதிமன்றம் வழங்கிய சம்மனை நடைமுறை அடிப்படையில் ரத்து செய்து, புகாரை மீண்டும் பரிசீலிக்குமாறு நீதிபதியைக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த உத்தரவை மீண்டும் பரிசீலித்து சம்மனை ரத்து செய்வதற்கு மாவட்ட நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டதற்கு பதிலாக புகாரை ரத்து செய்திருக்க வேண்டும் என்று கூறி நீதிமன்ற உத்தரவை மீறி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை புதிய விசாரணைக்காக மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பவும், மீண்டும் சம்மன் வழங்குவது குறித்து முடிவெடுக்கவும் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியது. மேலும் தேசிய கீதத்தை அவமதித்ததாக எழுந்த புகாரை ரத்து செய்யக் கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.