”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
பாகிஸ்தான் போர் விமானங்கள் நீண்டதூரம் தாக்கும் ஏவுகணைகளை தாக்குதலுக்கு பயன்படுத்தியது. அதனை இந்தியா துல்லியமாக முறியடித்தது என்று சோஃபியா குரேஷி கூறியிருக்கிறார்.

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்தித்து விளக்கினார்கள். அதில் கர்னல் சோஃபியா குரேஷி பேசுகையில், ”பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 26 இடங்களில், ட்ரோன்கள், உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது. மேற்கு காஷ்மீர் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா முறியடித்தது.
மேலும், இந்தியாவின் ஆயுதக் கிடங்குகளை பாகிஸ்தான் தாக்க முயன்றது. ஸ்ரீநகர் முதல் சாலியா வரை 26 இடங்களை பாகிஸ்தான் குறி வைத்தது. ஆதன்பூர், பதான்கோட் ராணுவ தளங்களுக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. பிரமோஸ் ஏவுகணை தளத்திற்கு எந்த சேதமும் இல்லை.
பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து அதிகாலை 1.40 மணி அளவில் அதிவேக ஏவுகணைகளை அனுப்பியது பாகிஸ்தான். துல்லியமாக தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை பயன்படுத்தி இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
பாகிஸ்தான், தங்கள் தற்காப்புக்காக சர்வதேச வான்வழித்தடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில், பாகிஸ்தானின் தவறான பொய் பிரசாரங்களை இந்தியா தவுடு பொடியாக்கியுள்ளது. இந்தியாவின் விமான போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு பாகிஸ்தான் குறிவைத்துள்ளது.