மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
16 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, பிரதமர் இங்கு வந்து தனது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பது இந்த சபை உறுப்பினர்களின் கோரிக்கையாக இருந்தது. அதாவது, நேற்றைய தினம் மக்களவையில் உரையாற்றியது போல் போல், பிரதமர் மாநிலங்களவைக்கு வந்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க வேண்டும் என்று கார்கே தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரினர்.
குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் பல கேள்விகள் அவருடன் நேரடியாக தொடர்புடையவை என்பதால், பிரதமர் மோடி சபைக்கு வந்திருக்க வேண்டும் என்று கார்கே கோரிக்கை வைத்திருந்தார். முன்னதாக, எதிர்க்கட்சிகள், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான விளக்கம் கோரியிருந்தனர். விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பதிலளித்தனர்.
இருப்பினும், ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றி வரும் நிலையில், அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி மாநிலங்களவையை அவமதித்துவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வெளிநடப்பு, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அரசின் வெளிப்படைத்தன்மை மற்றும் பதிலளிக்கும் முறை குறித்து எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான கவலைகளை பிரதிபலிக்கிறது.