தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங், ஷாகோட்டில் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிர சீக்கிய மத போதகரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங், போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஷாகோட்டில் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக ‘வாரிஸ் டி பஞ்சாபின்’ வழக்கறிஞர் இமான் சிங் காரா தெரிவித்தார். மேலும் போலீசார் இந்த கைதை மறைத்து, அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
இது குறித்து கூறிய இமான் சிங், போலீசார் அம்ரித்பால் சிங் கைது செய்ததை மறைத்து, அவரை போலி என்கவுண்டரில் கொல்ல முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். இதன்காரணமாக இமான் சிங், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அம்ரித்பால் சிங்கின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவர் ஷாகோட் காவல்நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இமான் சிங் வலியுறுத்தினார். மறுபுறம், பஞ்சாப் காவல்துறை, அம்ரித்பால் சிங் இன்னும் தப்பி ஓடுவதாகக் கூறி, வாரிஸ் பஞ்சாப் டி மற்றும் மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, அம்ரித்பால் சிங்கின் தந்தை டார்செம் சிங்கும், வாரிஸ் பஞ்சாப் டி’ தலைவர் பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாகவும், அம்ரித்பால் சிங் தலைமறைவாக இருப்பதாக போலீசார் பொய் கூறி வருவதாகவும் தெரிவித்தார்.
அவர் கைது செய்யப்பட்டதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அம்ரித்பால் சிங்கை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தவேண்டும் என்று டார்செம் சிங் மேலும் கூறினார்.