மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா என அரசியல் கட்சியினர் இடையே வன்முறைகள் நடைபெறுவதும், இதனால் உயிரிழப்பு நேரிடுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
அரசியல் வன்முறைகள் தொடர்கதையாகி வரும் நிலையில் புருலியாவில் பா.ஜனதா தொண்டர் துலால் குமார் என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்டார் என பா.ஜனதா சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பாத்பெரியா பகுதியில் பா.ஜனதாவின் வெற்றிக்கு பெரிதும் பணியாற்றிவர் என்று துலால் குமார் பாராட்டப்பட்டார். இந்நிலையில் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டது.
இச்சம்பவத்தை அடுத்து மம்தா பானர்ஜி மாவட்ட போலீஸ் அதிகாரி ஜாய் பிஸ்வாஸை நீக்கினார். இந்நிலையில் பாரதீய ஜனதா தொண்டர் தற்கொலை செய்துக்கொண்டார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் இம்முடிவை எடுப்பதற்கான காரணம் என்னவென்று விசாரிக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு இவ்விவகாரத்தை மூட முயற்சி செய்கிறது, இதுதொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதுவோம் என பா.ஜனதா தெரிவித்து உள்ளது.
ஆனால் திரிணாமுல் காங்கிரஸ், இது தற்கொலை விவகாரம், ஆனால் பாரதீய ஜனதா இதில் அரசியல் நடத்துகிறது என பதில் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளது.