மேற்கு வங்கம் : நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து, 207 தொகுதிகளில் வென்று முதல் முறையாக ஆட்சியை அமைத்தது. சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, மாநில அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட முக்கியமான பல்தா தொகுதி இடைத்தேர்தல் தற்போது தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜஹாங்கிர் கான் போட்டியிட அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திடீரென தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக ஜஹாங்கிர் கான் அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு மேற்கு வங்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஜஹாங்கிர் கான், “பல்தா தொகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே என்னுடைய முக்கிய நோக்கம். அந்தப் பகுதி அதிகபட்ச வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே நான் பணியாற்ற விரும்பினேன். ‘சோனார் பல்தா’ என்ற கனவுடன் செயல்பட்டேன். தற்போது முதலமைச்சர் பல்தா மக்களுக்காக சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறார். அதனால் தொகுதியின் வளர்ச்சி மற்றும் அமைதிக்காகவே நான் போட்டியிலிருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு தனிப்பட்டதா அல்லது கட்சியின் அழுத்தத்தால் எடுக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நான் ஏற்கனவே பல கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டேன். பல்தா மக்களின் நலனுக்காகவும், அமைதிக்காகவும், வளர்ச்சிக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று மட்டும் அவர் கூறினார்.
ஆனால், ஜஹாங்கிர் கானின் இந்த முடிவில் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. “பல்தா மறுவாக்குப்பதிவில் இருந்து விலகுவது ஜஹாங்கிர் கானின் தனிப்பட்ட முடிவு. தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து பல்தாவில் மட்டும் எங்கள் கட்சியின் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் அச்சுறுத்தல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், “பாஜக அரசு அதிகார அமைப்புகளின் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது. சிலர் அந்த அழுத்தத்திற்கு அடிபணிந்து அரசியலில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து போராடும்” என்றும் கட்சி தெரிவித்துள்ளது.
