கார் எரிப்பு.. கல்வீச்சு! உபியில் வெடித்த வன்முறைக்கு காரணம் என்ன?

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Hero Image

நொய்டா : உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. தொழிலாளர்கள் சிலர் வாகனங்களை எரித்து, கடைகள் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதுடன், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

நொய்டா பகுதி-2 மற்றும் செக்டர் 60 பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 13) நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கிய போராட்டம், பின்னர் வன்முறையாக மாறியது. சில தொழிலாளர்கள் வாகனங்களைத் தீ வைத்து எரித்ததுடன், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினர்.

இந்த வன்முறைச் சம்பவத்தால் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் அலுவலகத்துக்குச் செல்லும் ஊழியர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.கௌதம் புத்த் நகர் கமிஷனரேட்டின் கீழ் உள்ள தொழில்பேட்டைகளில் போதுமான போலீஸ் படை பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மூத்த போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்தில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், “நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கி அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தேவையான இடங்களில் குறைந்த அளவிலான படை பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரான நிலைமை விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.இந்த வன்முறைச் சம்பவம் தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. உத்தரப்பிரதேச அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.