பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில் போர் நிறுத்தம் – அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்!
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுலைமான் கொல்லப்பட்டதாக அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார். ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை காட்டுமிராண்டித்தனமான செயல் என்று கண்டித்தார். “அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் மதத்தைக் கேட்டு கொல்லப்பட்டனர். இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில், ஜூலை 28, 2025 அன்று ஸ்ரீநகரின் டச்சிகாம் தேசியப் பூங்காவில் இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில், பஹல்காம் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் ‘A’ வகை பயங்கரவாதி சுலைமான் ஷா (எ) ஹாஷிம் மூசா, மற்றொரு ‘A’ வகை பயங்கரவாதி ஆப்கன், மற்றும் ஜிப்ரான் ஆகியோர் அடங்குவர். “பைசாரன் பள்ளத்தாக்கில் நம் மக்களைக் கொன்ற மூன்று பயங்கரவாதிகளும் ஆபரேஷன் மகாதேவில் அழிக்கப்பட்டனர்,” என்று அமித் ஷா உறுதிப்படுத்தினார்.
தாக்குதல் நடந்த உடனே, அமித் ஷா ஸ்ரீநகருக்கு சென்று உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியதாகவும், “பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்ல முடியாதபடி உறுதி செய்தோம்,” என்றும் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் “டச்சிகாம் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளை, ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ், 4 பாரா, மற்றும் காவல்துறை இணைந்து ஆச்சரியத் தாக்குதல் மூலம் அழித்தனர். இந்தத் தாக்குதலில் ஒரு M4 கார்பைன், இரண்டு AK-47 துப்பாக்கிகள், மற்றும் 17 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் தாக்குதல் தொடர்பாக 3,000 மணி நேர விசாரணை நடைபெற்றதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பயங்கரவாதிகள், கொல்லப்பட்ட மூவரையும் அடையாளம் காட்டி உறுதி செய்ததாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நான் சந்தித்தேன். திருமணமான 6 நாட்களுக்குப் பிறகு விதவையான ஒரு பெண் என் முன் நிற்பதைக் கண்டேன் – அந்தக் காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பயங்கரவாதிகளை அனுப்பியவர்களை மோடி ஜி செயலிழக்கச் செய்தார், இன்று நமது பாதுகாப்புப் படையினர் கொலைகளைச் செய்தவர்களைக் கொன்றனர் என்பதை இன்று அனைத்து குடும்பங்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் 22 நிமிடங்களில் 9 முகாம்களை முற்றாக அழித்தோம். அதைப்போல, பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. பயணித்து அவர்கள் நிலத்திலேயே அவர்களை தாக்கினோம் இனிமேல் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த யோசிக்கும் அளவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறோம்” எனவும் தெரிவித்தார்.
மேலும், கொல்லப்பட்டவர்களிடம் இருந்து பாகிஸ்தான் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டதாகவும், இது பாகிஸ்தானின் ஈடுபாட்டை உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். “பாகிஸ்தானை காப்பாற்ற முயற்சிக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்,” என்று எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி அமித்ஷா பேசினார்.
அதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில் ” ஏற்கெனவே கைதான 4 பேரும், கொல்லப்பட்ட 3 பேரை அடையாளம் காட்டி உறுதி செய்தனர் எனவும் , பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில் போரை நிறுத்த இந்தியாதான் முடிவு செய்தது என்றும் அமித்ஷா பேசினார். இதன் மூலம் போர் நிறுத்தம் எப்படி நடந்தது என்பதற்கு தெளிவான விளக்கமும் கிடைத்துள்ளது.