கவின் கொலை வழக்கு : சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் சஸ்பெண்ட்!
நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதானவரின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான சுர்ஜித் (21) கைது செய்யப்பட்டுள்ளார். சுர்ஜித் மீது பாரதிய நீதி சட்டக் கோவை (BNS) மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 2015 ஆகியவற்றின் கீழ் கொலை உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான சுர்ஜித், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணையின்போது, “எனது அக்காவுடன் கவின் பேசுவது பிடிக்கவில்லை. அவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் கொலை செய்தேன்,” என்று வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தெரிவித்தது. சம்பவ இடத்தில் இருந்து CCTV காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு, கவினின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
சுர்ஜித், ஜூலை 28 அன்று கைது செய்யப்பட்டு, முதல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 14 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.சுர்ஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் (ராஜபாளையம் பட்டாலியன்) மற்றும் கிருஷ்ணவேணி (மணிமுத்தாறு பட்டாலியன்) ஆகியோரும் இந்த வழக்கில் துணை குற்றவாளிகளாக பெயரிடப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கவினின் தாயார் தமிழ்செல்வி அளித்த புகாரில், “சுர்ஜித்தின் பெற்றோர், கவினை மிரட்டியதுடன், கொலையைத் தூண்டியவர்கள்,” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் காவல்துறையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹடிமணி உறுதிப்படுத்தினார். கவினின் உறவினர்கள், உடலைப் பெற மறுத்து, 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கவினின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் நெல்லை காவல்துறையினர் கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர்கள் சரவணன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வந்தனர். தொடர்ந்து இது தொடர்பாக ரகசிய இடத்தில் வைத்து இருவரிடமும் காவல்நிலையத்தில் 2வது நாளாக விசாரணை நடத்தி வரும் நிலையில், காவல் சார்பு உதவி ஆய்வாளர்களான இருவரையும் டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
சரவணன் மற்றும் கிருஷ்ணவேணியின் உடனடி கைதையும், கடுமையான சட்ட நடவடிக்கையையும் கோரி, திருநெல்வேலி-திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் மக்கள் மற்றும் உயிரிழந்த கவினின் உறவினார்கள் பலரும் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். காவல்துறை, 24 மணி நேரத்தில் சரவணன் மற்றும் கிருஷ்ணவேணியை கைது செய்ய உறுதியளித்ததை அடுத்து, மறியல் வாபஸ் பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.