ஜூலை 1 முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்… மத்திய அரசு அறிவிப்பு!
ஜூலை 1ம் தேதி முதல் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா அதிநியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது, மக்களவையில் இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்றும் மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார்.
அதன்படி, இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) பெயரை “பாரதிய நியாய சன்ஹிதா” என மாற்றவும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CRPC) பெயரை “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா” என மாற்றவும், இந்திய சாட்சிகள் சட்டத்தின் (EA) பெயரை “பாரதிய சாக்ஷ்யா அதிநியம்” என மாற்றவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
Read More – வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 24*7 ஹெல்ப்லைன்.. தனியார் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு.!
ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட இந்த 3 சட்டங்களின் பெயர்களை மாற்ற மத்திய முடிவு செய்துள்ளதாகவும், இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் எனவும் அமித்ஷா தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறியதாவது, இந்தச் சட்டத்தின் கீழ், தேசத்துரோகம் போன்ற சட்டங்களை ரத்து செய்கிறோம். நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்களின்படி செயல்பட்டது.
எனவே மூன்று சட்டங்கள் மாற்றப்பட்டு, நாட்டில் குற்றவியல் நீதி அமைப்பில் பெரிய மாற்றம் வரும் என்றார். இந்த மசோதாவின் கீழ், தண்டனை விகிதத்தை 90%க்கு மேல் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா ஆகிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், IPC, CRPC, Evidence Act ஆகியவற்றுக்கு பதிலாக கொண்டுவரப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய சட்டங்கள் பிரிட்டிஷ் கால சட்டங்களை முழுமையாக மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
பாரதிய நியாய சன்ஹிதா:
பயங்கரவாதம், தேசத்துரோகம் போன்ற சட்டங்களை ரத்து செய்தல், பிரிவினைவாதம், கிளர்ச்சி மற்றும் இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயல்களை தண்டிக்கும் மற்றொரு விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுப் பாலியலுக்கு மரண தண்டனை மற்றும் முதல் முறையாக தண்டனைகளில் ஒன்றாக சமூக சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா:
வழக்குகளின் வாதங்கள் முடிந்த 30 நாட்களுக்குள் விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்குதல். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் மற்றும் குற்றச் செயல்களின் வருமானத்தை பறிமுதல் செய்வதற்கான புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாரதிய சாக்ஷ்யா அதிநியம்:
மின்னணு அல்லது டிஜிட்டல் ரீதியிலான சாதனங்களில் உள்ள செய்திகள் போன்ற ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படும். வழக்கு டைரி, எஃப்ஐஆர், குற்றப்பத்திரிகை மற்றும் தீர்ப்பு உட்பட அனைத்து பதிவுகளையும் டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்படுகிறது.