வெளிமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படுவது தொடர்பாக போலியான தகவல் பரப்பிய யூடியூபர் பீகாரில் சரணடைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்கள் முன்பு பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசியல் கட்சியினர், இது குறித்து பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என கூறிவந்தனர்.
பீகாரில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்குழுவும் அனுப்பப்பட்டது. மேலும் தமிழக காவல்துறையும் இந்த போலி வீடியோ குறித்து விளக்கம் அளித்திருந்தது, இந்த வீடியோ வேறு மாநிலங்களில் நடந்த பழைய வீடியோ என்றும், இது முற்றிலும் உண்மையில்லை.
மேலும் இது போன்று தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப், பீகாரின் மேற்கு சம்பாரனில் காவல்துறையில் சரணடைந்தார்.
கைது மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து காஷ்யப் சரணடைந்துள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்தது. மேலும் காவல்துறை, காஷ்யப் மீது 3 வழக்குகளை பதிவு செய்து, அவரது 4 வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளது.