வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் கொதித்தெழுந்த முதலமைச்சர் வி.டி. சதீசன்!

இது தவிர்க்க முடியாத விபத்து அல்ல, கட்டுமான நிறுவனத்தின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட துயரம் என முதலமைச்சர் வி.டி. சதீசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Hero Image

கேரளம் : மாநிலம் வயநாட்டில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் வி.டி. சதீசன் பேசியுள்ளார்.

வயநாடு - கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பணிக்காக அகற்றப்பட்ட மண், அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாகச் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சரிவின் காரணமாகப் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

தற்போதைய நிலவரம்:

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் 7 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் வி.டி. சதீசன், "இது ஒரு தவிர்க்க முடியாத விபத்து அல்ல, கட்டுமான நிறுவனத்தின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட துயரம்.

அகற்றப்பட்ட மண்ணை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோர் பலமுறை அறிவுறுத்தியும், ஒப்பந்ததாரர்கள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை," என்று குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில நாட்களில் இப்பகுதியில் சுமார் 225 மி.மீ மழை பதிவாகியுள்ளது, இது மீட்புப் பணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 8 எக்ஸவேட்டர்கள் (Excavators) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, மேலும் கூடுதல் மீட்புக் குழுவினர் கோழிக்கோட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வானிலை மோசமாக இருப்பதால் (Red Alert), மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து குறித்துக் கண்காணிக்க வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அணில்குமார் மற்றும் அமைச்சர் டி. சித்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மோசமான வானிலைக்கு மத்தியிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் கொதித்தெழுந்த முதலமைச்சர் வி.டி. சதீசன்!