டெல்லி : தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் நாடு முழுவதும் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான மசோதா நகலை எரித்து போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாக்களை தாக்கல் செய்தார்.
மசோதா அறிமுகமான உடனேயே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் பேசிக் கொண்டிருந்தபோது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறுக்கிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் நிலவியதால், சில நேரம் அவை சூழல் பதற்றமாகக் காணப்பட்டது.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு அமர்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த அமர்வில் பல முக்கிய மசோதாக்கள் விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா முக்கிய கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சுமார் 3 மணியளவில் மக்களவையில் உரையாற்ற வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த உரையில், இந்த மசோதாக்கள் குறித்து அவர் விரிவாக விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தத்தில், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களிலும் கடும் அரசியல் விவாதத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு எந்த முடிவை எடுக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
