ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!
ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை வைத்து சர்ச்சைக் கருத்து கூறிய மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா மன்னிப்பு கோரியுள்ளார்.

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ என்று குறிப்பிட்டதற்கு கடும் எதிர்ப்புகளை சந்தித்த பின்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.
அமைச்சர் விஜய் ஷா நேற்றைய தினம், இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய அவர், ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததில் பிரதமர் மோடியின் தலைமையை அவர் பாராட்டினார். பின்னர், நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டதாக அமைச்சர் விஜய் ஷா கூறியிருந்தார்.
இந்த நிலையில், கர்னல் சோபியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை பயங்கரவாதிகளின் சகோதரி என சித்தரிக்கும் வகையில் அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்டுள்ளார்.