இதுவரை 63.10 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதார செயலர்

According to the Central Health Department, 63.10 lakh frontline workers in India have been vaccinated against coronavirus so far.

இந்தியாவில் இதுவரை 63.10 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது. முன்கள வீரர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், இந்தியாவில் இதுவரை 63.10 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

மேலும், மொத்த கொரோனா பாதிப்பில் 71% பேர் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும் பாதிப்படைந்தவர்களில் 3.12% பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 15 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இறப்புகூட பதிவாகவில்லை. 7 மாநிலங்களில் கடந்த மூன்று வாரங்களாக ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை. 33 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடைய, தமிழகத்தில் இதுவரை 1.74 லட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.