சென்னை :தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை-2025 (SEP 2025) தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை விரிவான விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவில் பங்கேற்றிருந்த பேராசிரியர் ஜவகர் நேசன், கருத்து வேறுபாடுகள் காரணமாக குழுவிலிருந்து விலகிய பின்னர், கொள்கை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறை பின்வரும் விளக்கங்களை அளித்துள்ளது.
கொள்கையின் அடிப்படை நோக்கம்: மாநிலக் கல்விக் கொள்கை-2025, கல்வியாளர்கள், பாடத்திட்ட நிபுணர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவால் உருவாக்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் நல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்தக் கொள்கை, தேவைக்கேற்ப மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் உயிர்ப்புடன் உள்ள ஆவணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கொள்கை, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தொடர்ந்து வலியுறுத்துகிறது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கையையும், உயர்கல்வி சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வுகளையும் வெளிப்படையாக மறுக்கிறது. தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதுடன், மாணவர்களை உலகளாவிய சவால்களுக்கு தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கொள்கை, சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய கல்வியை வலியுறுத்துகிறது. பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களின் கற்றல் இடைவெளிகளைக் குறைக்க, குறைதீர் கற்பித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கிறது. சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பதில் எந்தக் குறையும் இல்லை என்று துறை உறுதியளித்துள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை உறுதி செய்கிறது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். நவீன திறன்கள் மற்றும் உள்கட்டமைப்பு: செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், தொழிற்கல்வி மற்றும் 21-ம் நூற்றாண்டு திறன்களை வளர்க்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள், கணினி வசதிகள், நூலகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்படும்.
பள்ளிக்கல்வித் துறை, இந்தக் கொள்கையை தமிழ்நாட்டின் கல்வித் தனித்துவத்தைப் பாதுகாக்கும், உலகளாவிய சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்தும், சமூக நீதியை வலுப்படுத்தும் ஒரு வலுவான அடித்தளமாக வடிவமைத்துள்ளதாகவும், ஜவகர் நேசனின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் தெரிவித்துள்ளது.
