பாஜக மூத்த தலைவர் அத்வானி உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : பாஜக மூத்த தலைவரும் , முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
இந்நிலையில், அத்வானி உடல்நிலை நிலவரம் குறித்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனை தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. அதில், மூத்த நரம்பியல் மருத்துவர் வினித் சூரி தலைமையிலான மருத்துவ குழு , அத்வானி உடல்நிலை குறித்து கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
2 நாட்களுக்கு முன்னர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அத்வானி உடல்நிலை சீராக இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை குறித்த தெளிவான விளக்க அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
இதே போல இந்த வருட தொடக்கத்திலும் , பாஜக மூத்த தலைவர் அத்வானி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.